மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து தமிழகம் வெற்றி நடைபோடும் – ரவீந்திரநாத்
அதிமுக-பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்று அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிமுகவே தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டு தற்போது தமிழகம் வந்து ஜல்லிக்கட்டை ரசிக்கிறார் ராகுல்காந்தி என விமர்சித்துள்ளார். தமிழகம் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு இன்று நாட்டிலேயே சிறந்த மாநிலமாக பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. ஆனால் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகம் ஒன்றுமே செய்யவில்லை என கூச்சலிட்டு வருகிறார்கள்.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அளித்ததற்காக நன்றி தெரிவித்து பேசிய அவர், நாடு முழுவதும் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 பூங்காக்கள் தமிழகத்தில் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனாவை தடுக்க தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.4000 கோடி ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.