சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு!
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு.
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும், மறைந்த உறுப்பினர்களுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்வில் நேற்று இபிஎஸ் தலைமையிலான அதிமுக புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்தார்.
இதன்பின், அக்.19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழுவில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளான சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. நேற்று புறக்கணித்திருந்த நிலையில், இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.
எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க கோரியும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, சபாநாயகருடனான சந்திப்புக்கு பின் சட்டப்பேரவையில் பங்கேற்பது குறித்து இபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.