அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை இன்று ஆஜர்படுத்த உத்தரவு
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக மனைவி சௌந்தர்யாவை இன்று ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இதனிடையே , பெண்ணின் தந்தை சுவாமிநாதன், தனது மகள் சவுந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கடத்தி சென்றதாக புகார் அளித்தார்.
மேலும், மகள் சவுந்தர்யாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது மனுவில், எனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்தி உள்ளார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புகார் கொடுத்ததைத் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவி சவுந்தர்யாவை இன்று ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.