விசிக போராட்டத்தில் அதிமுக பங்கேற்கலாம்.! திருமாவளவன் அழைப்பு.!
அக்டோபர் 2-ல்விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மது போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் தொடர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த சூழலில், போராட்டத்தில், “அதிமுக” பங்கேற்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மாநாடு குறித்து பல விஷயங்களை பேசினார். செய்தியாளர்களை சந்தித்தபோது “விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைப்பீர்களா என்ற பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டார்.
பத்திரிக்கையாளர் கேட்ட அந்த கேள்விக்கு சிரித்தபடி, பதில் கூறிய திருமாவளவன் ” அதிமுகவும் இந்த மாநாட்டிற்கு வரலாம், அதிமுக மட்டுமில்லை எந்த கட்சியும் வரலாம்..மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கும் எந்த கட்சி இருந்தாலும் இந்த போராட்டத்துக்கு வரலாம் என” கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ” மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. நல்லச்சாராயத்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல.. சாராயம் என்றாலே அது கேடுதான். மக்கள் பிரச்சனைகளுக்காக சாதிய சக்திகளை தவிர எந்த சக்திகளோடும் இனைய தயாராக இருக்கிறோம். மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
ஆட்சி செய்யும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணியில் பங்கேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.