அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு – ஓபிஎஸ் பேனர் கிழிப்பு;பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம்?..!!
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.ஆனால்,அதில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரில்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற பேரில் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்தார். மேலும்,சட்டத்திற்கு புறம்பாக கூட்டப்படவுள்ள இக்கூட்டத்தில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் அது ஒருங்கினைப்பளர்கள் மற்றும் தொண்டர்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்திருந்தார்.
இதனால்,கூட்டத்திற்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், விஜய பாஸ்கர்,செங்கோட்டையன்,வளர்மதி,சீதா செல்லப்பாண்டியன், தம்பிதுரை உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேலும், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி, ஜெயக்குமார்,சிவி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து,அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்து ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ளது.ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்ததால் தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில்,அலுவலகத்திற்கு வெளியே ஈபிஎஸ் பொதுச்செயலாளராக வேண்டும் என தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே,அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்,கேபி முனுசாமி அல்லது திண்டுக்கல் சீனிவாசன் அப்பதவியில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக,ஓபிஎஸ்-இன் அதிமுக பிரச்சார வாகனத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவர்களின் படங்கள் நேற்று அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.