2021இல் அதிமுக 7 எம்.பி சீட்களை வென்றுள்ளது.! இபிஎஸ் போட்ட புது கணக்கு.! 

ADMK Chief secretary Edappadi palanisamy

மதுரையில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களையும், மக்களவை தேர்தல் குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.

மதுரையில் திமுக – அதிமுக :

மதுரையில் திமுக அரசு புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அதிமுக ஆட்சி காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திமுக ஸ்டிக்கர் :

விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தினரில் திமுக அரசு குறிப்பிடப்பிடுள்ளது. ஆனால், அதற்கு அதிமுக ஆட்சிக்காலத்திலேயே அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இதற்கு தற்போது திமுக ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல்- அதிமுகவில் இன்று விருப்ப மனு விநியோகம்..!

அதிமுக கட்சி , சின்னம் :

அதிமுக கட்சி மற்றும் சின்னத்தை யாரும் முடக்க முடியாது. ஏற்கனவே உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி விட்டது. இனி யாராலும் அதிமுக கட்சியை ஒன்றும் செய்ய முடியாது.

கூட்டணி மாறும் :

2024 மக்களவை தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் இங்கு உள்ள பல்வேறு கட்சிகள் இடம் மாறும். பல்வேறு கட்சிகள் திமுக உட்பட யாருமே தங்கள் கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதிமுகவில் உள்ளவர்கள் பாஜகவுக்கு மாறுகிறார்கள். பாஜகவில் உள்ளவர்களும் அதிமுக பக்கம் வருகிறார்கள். அது அவர்களின் ஜனநாயக உரிமை.

வாரிசு அரசியல் : 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுக்கு மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் கொடுப்பது பற்றி பேசுகையில், வாரிசு அரசியல் என்பது கட்சியில் தேர்தலில் நிற்க சீட் கொடுப்பது அல்ல. வாரிசு அரசியல் என்பது தலைமையை பகிர்ந்து கொடுப்பது. திமுகவின் தலைவராக கருணாநிதி இருந்தார். அதற்கு பிறகு மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அதற்கு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை தலைவராக்க முயற்சிக்கிறார்கள். இதுதான் குடும்ப அரசியல். திமுக குடும்ப கட்சி கூட அல்ல . அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

பிரதமர் வேட்பாளர் இல்லை : 

பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் நாங்கள் தேர்தலை சந்திப்போம். கடந்த 2015ஆம் ஆண்டு அவ்வாறு தான் ஜெயலலிதா தலைமையில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். அதேபோல், ஆந்திரா தெலுங்கானா, மேற்கு வங்கம், ஒடிசா என பல்வேறு மாநிலங்கள் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.

7 தொகுதிகளில் வெற்றி :

2021 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 71 இடங்களை பெற்றுள்ளோம். அப்படி கணக்கிட்டால் அப்போதே நாங்கள் 7 மக்களவைத் தொகுதிகளை வென்று விட்டோம். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தார்கள். மேலும், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் என பல்வேறு தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே நாங்கள் தோற்றோம் என்றும் பல்வேறு கருத்துக்களை மதுரையில் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்