அதிமுக அரசின் அவல நிலை!! ரத்த கண்ணீரை வர வைக்கிறது – மு.க.ஸ்டாலின் வேதனை
தமிழகத்தில் தடுப்பூசி விரயமாக்கப்பட்டிருப்பது ரத்த கண்ணீரை வர வைக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகளை வீணடிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் என்ற அவல நிலையை அதிமுக அரசு உருவாகியிருப்பது வேதனை அளிக்கிறது என்றும் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளி நாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் மாநிலத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு ட்ரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆக்சிஜன் கையிருப்பில் இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பாஜக, இப்போது 50 ஆயிரம் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்கு காரணம் மத்திய பாஜக அரசின் நிர்வாக அலட்சியமா? அல்லது நிர்வாக தோல்வியா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுதோல்வி அடைந்திருப்பது ஏன் என்றும் தடுப்பூசி விரயமாவதை தடுத்தல், ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜனை தட்டுபாடு இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஏற்பட்டவுடன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் 12.10% தடுப்பூசி வீணாக்கப்பட்டுள்ளது என்பது ரத்த கண்ணீர் வர வைக்கிறது. கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழ்நாடு முதலிடம்; தமிழக அரசுக்கே தெரியாமல் ஆக்சிஜனை டிரான்ஸ்பர் செய்யும் @narendramodi-யின் மத்திய பாஜக அரசு!
இதுவா #COVIDEmergency தடுப்பு?
மத்திய – மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான, போர்க்கால நடவடிக்கைகளை பொறுப்புடன் எடுத்து மக்களைக் காத்திட வேண்டும். pic.twitter.com/xQI4VQ8Uco
— M.K.Stalin (@mkstalin) April 21, 2021