அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் – வைகோ கண்டனம்
கிராமசபைக் கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் என்று வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கூறுகையில், திமுக முன்னின்று நடத்தும், கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் கிராம சபை கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில், கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இதற்கு முக ஸ்டாலின், கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் கூடுவதை பார்த்து முதல்வர் பழனிச்சாமி அதிர்ச்சி மூழ்கிவிட்டார். அதிமுகவிற்கு தைரியமிருந்தால் போட்டி கூட்டம் நடத்தட்டுமே! இரு தினங்களில் கிளப்பியுள்ள எதிர்ப்பு அலை முதலமைச்சரின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.