அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.? உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு.!
அதிமுக பொதுசெயலாளர் பதவி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தால் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என சசிகலா தரப்பு கேவியேட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் விகே.சசிகலா அதிமுக புதிய பொதுச்செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் அதிமுக பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டனர்.
சசிகலா நீக்கம் : அதனை தொடர்ந்து, சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர், 2017இல் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை பதவிகளில் இருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதவியில் இருந்தனர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு : இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கு தாக்கல் செய்து இருந்தனர். சசிகலா மனுவை எதிர்த்து, இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் செம்மலை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் செம்மலை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மேல்முறையீடு : இதனை அடுத்து, செம்மலை , அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக எழுந்த தகவலை அடுத்து அவர்களுக்கு முன்னதாக தற்போது சசிகலா தரப்பு டெல்லி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
கேவியேட் மனு : அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வழக்கு தாக்கல் செய்தால், தன்னையும் ஒரு மனுதாரராக கருதி தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கேவியேட் மனு ஒன்றை சசிகலா தரப்பு தாக்கல் செய்துள்ளது. அந்த கேவியேட் மனுவில் சசிகலாவின் பெயர் அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு பதியப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.