அதிமுக கொடி, 1.5 கோடி தொண்டர்கள் இனி இபிஎஸ்-க்கு தான் சொந்தம் – பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக கொடி, 1.5 கோடி தொண்டர்கள் இனி இபிஎஸ்-க்கு தான் சொந்தம். இனி யாரும் கூக்குரல் இட முடியாது என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து பொள்ளச்சி ஜெயராமன் கூறுகையில், ‘இனிமேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை; இது அதிமுகவினர் மட்டும் எதிர்பார்த்த தீர்ப்பு அல்ல, நாட்டு மக்களும் எதிர்பார்த்த தீர்ப்பு; ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும்.
எத்தனையோ சோதனைகளை சந்தித்து அதிமுக என்றால் இபிஎஸ் தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள்; அதிமுக கொடி, 1.5 கோடி தொண்டர்கள் இனி இபிஎஸ்-க்கு தான் சொந்தம். இனி யாரும் கூக்குரல் இட முடியாது.
புதிய தெம்போடு திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு,அதிமுக ஆட்சியை அமைக்க மக்கள் தயாராவார்கள்; மக்களுக்கு இபிஎஸ் பாதுகாப்பு அரணாக இருப்பார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.’ என தெரிவித்துள்ளார்.