செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்து அதிமுக வழக்கு!
செந்தில் பாலாஜி வழக்கில் அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன் சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை வழக்கு தொடுத்துள்ளார்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக தொடர்வதை ஆளுநர் அங்கீகரிக்கவில்லை, எந்த அடிப்படையில் அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறார் என கேள்வி எழுப்பி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதால் அரசு பணம் வீணாவதாகவும் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது இலாகாக்கள், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். ஆனால், செந்தில் பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக தொடருவார் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார்.
இருப்பினும், செந்தில் பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.