#Breaking:வருமானத்தை விட 3,928% கூடுதலாக சொத்து -அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்தை விட 3,928% கூடுதலாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது.
அதிமுக முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி,தான் பதவி வகித்த காலங்களில் முறைகேடாக நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கிய புகாரின் அடைப்படையில் அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது சகோதரர் வீடு, அவருக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்கள் என மொத்தம் 60 இடங்களில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோவையில் 42, சென்னையில் 16 இடங்களிலும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 13 லட்சம் ரொக்கம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புத்தொகை கைப்பற்றப்பட்டதாகவும், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள், நிறுவனங்களுக்கிடையே பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும்,எம்.எல்.ஏ விடுதியில் எஸ்.பி.வேலுமணி அவர்களின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் 9 நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதேபோல் வேலுமணி வீட்டில் லாக்கர் சாவியையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில்,கோவையில் உள்ள எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும் 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ.58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் குடும்பத்தினர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர்.தேர்தல் நேரத்தில் இவர் தாக்கல் செய்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.