அதிமுக முன்னாள் அமைச்சர் வெற்றியை எதிர்த்த வழக்கு .. தீர்ப்பு ஒத்திவைப்பு!
2021 சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ். மணியன் 12,329 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது ரூ.60 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா செய்துள்ளார். பரிசு பொருள்களுக்கான டோக்கன் விநியோகித்துள்ளார். வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கப்படும் எனும் பொய் வாக்குறுதி அளித்துள்ளார். தொகுதி முழுவதும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தி உள்ளார் என மனுவில் தெரிவித்தார்.
இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.