மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..! நடிகை திரிஷா விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜு பேட்டி
நடிகை திரிஷா விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜு மன்னிப்பு கோரியுள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை திரிஷாவின் பெயரையும் வெளிப்படையாக கூறினார்.
அவரின் இந்த பேட்டி சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நடிகை திரிஷா எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், “கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசும் நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. எனது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கையை எடுப்பார்கள்” என பதிவிட்டிருந்தார்.
நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கைது!
இந்த நிலையில் தனது பேச்சிற்கு ராஜு மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, “இயக்குநர் சேரன், ஆர்.கே செல்வமணி மற்றும் திரைத்துறையினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த செய்தியை நான் பரப்பவில்லை, சம்மந்தப்பட்ட நபர் என்னிடம் சொன்னதையே சொன்னேன். திரிஷா குறித்து நான் எந்த இடத்திலும் பேசவில்லை. திரிஷாவிடம் ஒரு வேண்டுகோள், உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.