அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
சென்னையில் அதிமுக தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஸ் ஆலோசனை.
சென்னையி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாகவும், திமுக ஆட்சியில் அதிமுக திட்டங்கள் முடக்கம் பற்றியும், ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஒற்றை தலைமை, பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சி ரீதியிலான பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி கிடைத்துள்ளது இதன் காரணமாக அதிமுக தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் ஒருபக்கம், அதிமுகவில் தற்போது இரட்டைத் தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை வேண்டும் என முழக்கங்களும் எழுந்துள்ள நிலையில், மறுபக்கம் இரட்டைத் தலைமை தான் கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறது எனவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வரும் நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.