“மொழிப்பற்று உடையவனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும்” – ஓபிஎஸ் வாழ்த்து..!

Default Image

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.மேலும்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் 14 முக்கிய அறிவுப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

அதன்படி,மகாகவி பாரதியின் நினைவு நாளான இன்று ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில்,மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

சமூக நீதி நாள்:

தந்தை பெரியாரின் பிறந்த நாள் “சமூகநீதி” நாளாகக் கொண்டாடப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சில தினங்களுக்கு முன் அறிவித்தபோது, அதனை நான் வரவேற்றதோடு, இந்திய விடுதலைக்கு முன், மொழிப் பற்றினையும், நாட்டுப் பற்றினையும், ஒருமைப்பாட்டினையும், காவேரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலை உணர்வினை ஊட்டிய மகாகவி பாரதியரோடு ஒப்பிட்டு தமிழ்நாட்டில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள் என்று கூறியிருந்தேன்.

இது வரவேற்கக்கூடிய ஒன்றுதான்:

இந்த நிலையில், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் “மகாகவி” நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்று.

இவர்கள்தான் நாட்டுப்பற்று உடையவர்கள்:

தமிழ் மொழியின் சிறப்பினை உலகுக்கு உணர்த்திய கவிஞர் மகாகவி பாரதியார். மொழிப்பற்று உடையவனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் மகாகவி பாரதியார். விடுதலைப் பாடல்களால் தமிழகத்தை வீறுபெறச் செய்தவர் மகாகவி பாரதியார்.

யார் இந்த பாரதி:

பாரதி ஒரு பன்மொழிப் புலவர். ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த பாரதி, “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாடினார் என்றால், அந்த அளவுக்கு உயர்ந்த மொழி தமிழ் மொழி என்பது தான் அதன் உள்ளார்ந்த பொருள். தமிழ் மொழியின் சிறப்பையும், உயர்வையும் கூறி இளைஞர்களின் உள்ளங்களில் இன்றளவிலும் சிம்மாசனமிட்டு இருப்பவர் பாரதியார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சிலகாலம் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பாரதி, பல செய்தி இதழ்களையும் நடத்திய பெருமைக்குரியவர்.

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” எனத் தாய் நாட்டின் உயர்வை வியந்து பாடிய பாரதி, நாட்டுப் பற்றினை போற்றும் வகையில், “வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு” என்று பாரத நாட்டையும் போற்றி மகிழ்ந்தார்.

“முப்பது கோடி முகமுடையாள் – உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் – எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” எனப் பாடி, இந்தியர்களின் ஒற்றுமை உணர்வை படம் பிடித்துக் காட்டியவர் மகாகவி பாரதியார்.

பாரதியாரின் வாக்கு;புரட்சித் தலைவி அம்மா செய்த காரியம்:

“ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஒங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமையை நிலை நாட்டும் வகையிலும், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், மகளிர் இரு சக்கர வாகனத் திட்டம் என பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியதோடு, சென்னை திருவல்லிக்கேணியில் மகாகவி பாரதியார் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை புதுப்பித்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின்அவர்களின் அறிவிப்பு:

‘ஏழை என்றும், அடிமை என்றும், எவனும் இல்லை சாதியில்’ என்று பாடிய புரட்சிக் குயில் பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு, பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகத்தை மாணவ, மாணவியருக்கு வழங்குதல்; பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப் பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தல்; பாரதி குறித்த நிகழ்வுகளை ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்துதல்; ‘திரையில் பாரதி’ என்ற நிகழ்வினை நடத்துதல்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரில் இருக்கை அமைத்தல்; உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பதினான்கு அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருக்கிறார்.

இந்த அறிவிப்புகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,எனது மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi