நீட் தேர்வு;ஒரு பக்கம் குழந்தையை கிள்ளி விட்டு மறுபக்கம் தொட்டிலை ஆட்டும் திமுக- ஓபிஎஸ்..!

Published by
Edison

நீட் தேர்வினை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு காரணமாக இருந்துவிட்டு,தற்போது அதை எதிர்க்கும் திமுகவின் செயலை நினைத்தால்,ஒரு பக்கம் குழந்தையை கிள்ளி விட்டு மறுபக்கம் தொட்டிலை ஆட்டும் பழமொழி நினைவுக்கு வருகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் திமுக:

ஒரு பக்கம் ‘நீட் தேர்வு’ என்பதற்கு மூலக் காரணமாக இருந்துவிட்டு மறு பக்கம் ‘நீட் தேர்வு எதிர்ப்பு’ என்ற மாயத் தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க நினைக்கும் தி.மு.க.வின் செயலை நினைக்கும்போது “குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும்” பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது.

நீட் தேர்வு குறித்து குழு அமைக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஒரு கருத்தினை தெரிவித்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது நிலைபாட்டினை அறிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறி இருப்பதாக இன்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மத்திய ஆட்சியை தாங்கிப் பிடித்த தி.மு.க.:

காவேரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, 2010 ஆம் ஆண்டைய அணைப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு (Dam Safety Bill, 2010), நீட் தேர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவு தொடர்பான 2011 ஆம் ஆண்டைய 115-வது அரசமைப்பு திருத்தச் சட்டமுன்வடிவு (Constitution (115th Amendment) Bill 2011), 2013 ஆம் ஆண்டைய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act, 2013), தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய மையத்தை அமைப்பது (Establishment of National Counter Terrorism Centre), 2011 ஆம் ஆண்டைய சுகாதாரத்திற்கான மனித வளங்கள் குறித்த தேசிய ஆணையச் சட்டமுன்வடிவு (National Commission for Human Resources for Health Bill, 2011), மாநில அரசை புறந்தள்ளிவிட்டு நேரடி பயன்கள் மாற்றத் திட்டத்தை (Direct Benefits Transfer Scheme) கொண்டுவர 2013 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது, 1968 ஆம் ஆண்டைய எல்லைப் பாதுகாப்புப் படைச் சட்டத்தில் (BSF Act) திருத்தங்களை கொண்டுவர முயன்றது என மாநில சுயாட்சிக்கு, மாநில உரிமைகளுக்கு, மாநில நலன்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு எடுத்தபோது, அவற்றிற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளிவராமல் அப்போதைய மத்திய ஆட்சியை தாங்கிப் பிடித்த தி.மு.க. இப்போது ‘நீட்’ தொடர்பான நிலைப்பாட்டை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவிக்க வேண்டும் என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

நீட் தேர்வு;அதிமுகவின் நிலைப்பாடு:

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு உள்பட அனைத்து படிப்புகளுக்குமான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதும், ‘நீட்’ தேர்வு உள்பட எந்தத் தேர்வும் அனுமதிக்கப்படக் கூடாது என்பதும் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு.

இறுதி மூச்சு வரை எதிர்த்தவர் அம்மா:

‘நீட்’ தேர்வு உட்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தன் இறுதி மூச்சு வரை எதிர்த்தவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் நிலைப்பாடு தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இடஒதுக்கீடு:

இதன் அடிப்படையில்தான் நீட் தேர்வினை ரத்து செய்யும் வகையில், இரண்டு சட்டமுன்வடிவுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசால் 1-2-2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை சட்டமாகாத சூழ்நிலையில், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி, அதன் அடிப்படையில் ஏழை, எளிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மருத்துவப் படிப்பினை படிக்க வழிவகை செய்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதி:

நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்களும், தமிழ்வழி பயில்கின்ற மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதன் அடிப்படையிலும், தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்பவும் சட்ட நடவடிக்கையை எடுக்காமல், மருத்துவச் சேர்க்கையில் ‘நீட்’ தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைத்திருப்பது என்பது தாமதப்படுத்தும் செயல் என்று நான் ஏற்கெனவே எனது அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு இருந்தேன் என்பதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை காரணம் காட்டி இந்தப் பிரச்சனையை தி.மு.க. நீர்த்துப் போகச் செய்கிறதோ என்ற ஐயம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இதன்மீது விரைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.

நீட் தேர்வு ரத்து:

‘நீட்’ தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவு வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரிலாவது நிறைவேற்றப்பட்டு, உடனடியாக மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. ‘நீட் தேர்வு ரத்து’ என்பதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஒத்துழைப்பை நல்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 எனவே, நீட் தேர்வினை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தி, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டிலேயே மருத்துவப் படிப்பில் சேர்க்கை நடைபெற ஆவன செய்ய வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

6 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

7 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

8 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

10 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

10 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

11 hours ago