சந்திரயானைவிட அதிமுக மாநாடு தான் உலக அளவில் அதிகமாக பேசப்படுகிறது! – ஆர்.பி.உதயகுமார்
அதிமுக எழுச்சி மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் இட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு. சந்திரயானைவிட அதிகமாக அதிமுக மாநாடு உலக அளவில் பேசப்படுகிறது என்றுள்ளார்.
அதிமுக மாநாட்டில் மக்கள் நலனுக்காக 32 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன. திருக்குறளை தேசிய பொதுமறையாக அறிவிக்க வேண்டும், பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக தலைமையிலான அரசு கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது. ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறுகிறார்கள்.
ராகுல்காந்தி எப்போது பிரதமர் ஆவது, எப்போது நீட் தேர்வை ரத்து செய்வது என விமர்சித்தார். திமுக – காங்கிரஸ் தான் கச்சத்தீவை தாரை வார்த்தது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் மரணங்களுக்கு திமுக – காங்கிரஸ் கட்சிகளே பொறுப்பு. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பேச்சுக்களை மக்கள் நம்ப தயாராக இல்லை. மேலும், சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன், இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.