அதிமுக மாநாடு: விழா மேடைக்கு இபிஎஸ் வருகை..! அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார்.
அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் தொண்டர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் வேடமிட்டு கலந்து கொண்டனர். இதில் கலை நிகழ்ச்சிகளுக்காக 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநாடு நடைபெறும் விழா மேடைக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோரின் திரு உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு மேடைக்கு வந்த அவரை இசையமைப்பாளர் தேவா பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இதன்பிறகு பொன்விழா எழுச்சி மாநாட்டு சிறப்பு மலரை இபிஎஸ் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் அதிமுக நிர்வாகி வைகைச் செல்வன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் 16 தீர்மானங்கள் முதலில் வாசித்தனர். பிறகு மற்ற தீர்மானங்களை மூத்த அதிமுக நிர்வாகி செம்மலை வாசித்த நிலையில், மொத்தமாக 32 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.