அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்குமா? – அதிமுக
AIADMK: எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார். அதாவது, பிரதமர் மோடியின் ரோடு ஷோவை விமர்சித்திருந்த இபிஎஸ்-ஐ நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார்.
பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள், தமிழ்நாடு மக்கள் புத்திசாலிகள், பாஜகவின் ஏமாற்று வேலை அவர்களிடம் எடுபடாது என இபிஎஸ் விமர்சித்து இருந்தார். இது குறித்த கேள்விக்கு அண்ணாமலை கூறியதாவது, திராட்சைப்பழம் புளிக்கிறது என்பது போன்று இபிஎஸ் பேசி வருகிறார் என நரி வசனத்தை மேற்கோள்கட்டி அவரை விமர்சித்திருந்தார்.
அதேசமயம் பிரதமர் மோடி போல் ரோடு ஷோ நடத்த எடப்பாடி பழனிசாமி தயாரா? என சவால் விட்ட அண்ணாமலை, தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்றும் 2019 தேர்தலில் பாஜக தோல்வி அடைய அதிமுகவே காரணம் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவின் நிலை நரியின் நிலைமைபோல் தான் இருக்கும். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? கேள்வி எழுப்பிய செம்மலை, எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றார்.
மேலும் அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒன்றரை சதவீதம் தான் வாக்கு வங்கி உள்ளது. எனவே தோல்வி பயத்தால் அண்ணாமலை உளறி கொண்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் பாஜக என்ன செய்தாலும் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வாங்கமாட்டார்கள் என தெரிவித்தார்.