“அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்” – ஓ.பன்னீர்செல்வம்…!

Default Image

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகுவதை சரி செய்ய அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாகிவரும் நிலை இனி ஏற்படாமல் இருக்க அரசிற்கு சொந்தமான கிடங்குகளில் நெல் மூட்டைகளை வைக்கவும், கூடுதலாக ஆங்காங்கே கிடங்குகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

விலையில்லா அரிசி:

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்து உயர்வு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றினை மாநிலத்தில் வசிக்கின்ற ஒவ்வொருவரும் அடையும் வண்ணம், பொருளாதார பாகுபாடின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின்மூலம் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவிஅம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு துவக்கி வைத்தார்கள்.

இதற்கு 2013-ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அதையும் தாண்டி, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற பாதுகாப்பு மட்டுமல்லாமல், ‘பாதுகாக்கப்பட்ட உணவு’ கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், இந்தத் திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

நெல் மூட்டைகள்:

சில நாட்களுக்கு முன்,மதுரை மாவட்டம், தோப்பூர் அருகே திறந்தவெளி களத்தில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. உடனே மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் அவர்கள், தோப்பூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததன் காரணமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இந்தச் சூழ்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில், திறந்த வெளியில் வைக்கப்பட்ட கொள்முதல் செய்யாத பத்தாயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் சேதமடைந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

கடும் மழை:

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில், அன்னப்பன் பேட்டை, சடையார் கோவில், பொன்னாப்பூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் திறந்த வெளியில் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டும், மூடப்படாமலும் குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், இதே போன்று திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், இவை அனைத்தும் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம்:

இந்திய வானிலை ஆய்வு மையம் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை முன்கூட்டியே தினசரி அறிவிக்கின்ற சூழ்நிலையில்,இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. இதனை மீண்டும் சரி செய்ய ‘அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை’ ஏற்படும்.

கிடங்குகள்:

இதுபோன்ற நிலைமை இனிமேல் ஏற்படாமல் இருக்க, இந்திய வானிலை ஆய்வு மையம் தினசரி தரும் தகவல்களின் அடிப்படையில், திறந்தவெளி களங்களில் உள்ள நெல் மூட்டைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான கிடங்குகளிலோ அல்லது காலியாக உள்ள பாதுகாப்பான அரசு கட்டடங்களிலோ வைக்கவும், எதிர்காலத் திட்டமாக ஆங்காங்கே கிடங்குகளை கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்