அதிமுக வேட்பாளர்கள்;காங்.மூத்த தலைவர் ப.சிதம்பரம்-இன்று வேட்புமனு தாக்கல்!

Default Image

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது.

இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஆர்எஸ் பாரதி,டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார்,நவநீதகிருஷ்ணன்,எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் இறுதியில் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில்,மே 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து.

இதனிடையே,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.அதன்படி,திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில்,திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம்,கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவர் என்றும்,ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான கிரிராஜன்,ராஜேஷ்குமார்,கல்யாணசுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இருதினங்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனிடையே,இரு மாநிலங்களவை இடங்களுக்கான அதிமுக உறுப்பினர்கள் தேர்வில் இழுபறி நீடித்து வந்த நிலையில்,இரு மாநிலங்களவை இடங்களுக்கான அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை ஓபிஎஸ்,ஈபிஎஸ் கூட்டாக அறிவித்தனர்.அதன்படிஅதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,தர்மர் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில்,அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,தர்மர் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

அதே சமயம்,தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்ட நிலையில்,இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ப.சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்