அதிமுக ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும்.! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி.!
2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இருவர் தலைமையில் இருந்த அதிமுக கட்சியானது ஜூலை மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒற்றை தலைமை எனவும், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே தீர்ப்பு வெளியானது. ஆனாலும், தொடர்ந்து ஓ.பன்னேர்செல்வம் நீதிமன்றத்தை நாடி வந்தார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணைநடந்து முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
இதுகுறித்து இன்று ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர் கூறுகையில் அதிமுக பாஜக கூட்டணி, வழக்கு என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
அவர் கூறுகையில், ஜூலை 2022இல் அதிமுக பொதுக்குழு கூட்டமானது நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி நடத்தப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனால் நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார். மேலும், கூறுகையில், அதிமுக பாஜக கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமை தான் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என நினைத்துக் கொள்கிறார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என அவர்கள் (எடப்பாடி தரப்பு) கூறியது அது அவர்கள் நிலைப்பாடு. அதனைப் பற்றி நாங்கள் கவலைப்பட தேவையில்லை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , அறிஞர் அண்ணா பற்றியும் ஜெயலலிதா பற்றியும் கூறிய கருத்துகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வருத்தப்பட்டதாக தெரியவில்லை என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். இதனை தான் நாங்கள் ஆரம்ப முதல் சொல்லி வருகிறோம். இது பற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் கேளுங்கள் என்று குறிப்பிட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி கேட்கையில், அது தற்போது நடப்பதாக தெரியவில்லை. அதற்கு வாய்ப்பில்லை என்று கூறிய ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி குறிப்பிட்டார். அண்ணாமலை எங்களை கேட்டுக்கொண்டார். அதன் பெயரில் நாங்கள் எங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற செய்தோம். அதேபோல டி.டி.வி.தினகரன் வாபஸ் பெற்றார். அதனால்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர் போட்டியிட்டார்.
இருந்தும் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். கொங்கு பகுதிஅதிமுக கோட்டை அதில் அதிமுக தோல்வி கண்டது. இதன் மூலம் மக்கள் அவரை (இபிஎஸ்) தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்தனர்.