உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிக்கலாம் – அதிமுக அறிவிப்பு!
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் உரிய கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, உள்ளாட்சி பதவிகளுக்கான கட்டணம் , மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினருக்கு ரூ.5,000, ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினருக்கு ரூ.3,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை, சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்-2021
கழக வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெறுதல்.#LOCALBODYELECTIONS #AIADMK pic.twitter.com/yT3UJXhMPB
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) September 15, 2021