அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! ‘புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்’ – சி.டி.ரவி
‘புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்’ என்று தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு இரு கட்சிகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது, பாஜக மேலிடத்துக்கு அதிர்ச்சியை தந்துள்ளது என்றே கூறலாம்.
ஏனென்றல், வரும் தேர்தலில் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெறாமல் என்று பாஜக எண்ணிக்கொண்டு இருந்த நிலையில், அண்ணாமலையுடனான மோதலால் கூட்டணி முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்தது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் கூறுகையில், அதிமுக விலகியதால் பாஜகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை.
எங்கள் மேலிடம் அறிவுரை கூறிய பிறகு எங்களது கருத்துக்களை தெரிவிக்கிறோம் என்றும் அதுவரை எந்த கருத்தும் கூற மாட்டோம் எனவும் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு கூட்டணி முறிவு என்று அறிவித்த அதிமுக தற்போது பேசாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.
இதனால், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமான என சந்தேகம் எழுந்தது. அதற்கேற்ப, அதிமுக நிர்வாகிகளும் மவுனம் காத்து மழுப்பலாக பதில் அளித்து வந்தனர். பாஜக குறித்து விமர்சிக்க வேண்டாம் எனவும் அதிமுக தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. எனவே, பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்குமா? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.பி.முனுசாமி, மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை.
அண்ணாமலையை மாற்ற அதிமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. புதிய கூட்டணி அமைத்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும். தமிழ்நாடு மக்களின் நலன், உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாடுபடும் என அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்தார். இவரது பேட்டிக்கு பிறகு பாஜக கருத்து கூறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்’ என்று தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி X தளத்தில் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.