இடைத்தேர்தல் – பிரச்சாரத்தில் பாஜகவை தவிர்க்கிறதா அதிமுக?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியான பாஜகவை தவிர்த்து வரும் அதிமுக.
சூடு பிடித்த தேர்தல் பிரச்சாரம்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நூதன முறையில், வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பாக திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதராவாக வாக்கு சேகரிக்கும் பணியில் அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர். மறுபக்கம் அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில், பாஜகவில் நயினார் நாகேந்திரன் தென்னரசுக்கு ஆதரவாக முதல் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
பாஜகவை தவிர்க்கும் அதிமுக:
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவை அதிமுக தவிர்த்து வருகிறது. முதல்நாள் தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் தலைகாட்டிய பாஜக நிர்வாகிகள் அதன்பின் ஒதுங்கி கொண்டதாக கூறப்படுகிறது. சில நாட்களாக அதிமுக வேட்பாளர் தென்னரசு பிரச்சாரத்தில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. பிரச்சாரத்தில் பங்கேற்கும் பாஜகவினரும் கொடி ஏதுமின்றி அடையாளம் தெரியாமல் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கொடி:
மேலும், அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பிரச்சார கூட்டத்தில் ஒன்றாக கலந்துகொள்கின்றனர். இதுபோன்று, அதிமுக பிரச்சாரத்தின்போது தமிழ் மாநில காங்கிரஸ் கொடியும் பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே, இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்காமல், அதிமுகவில் வேட்பாளரை அறிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிட்டாரா என கேள்வி எழுந்தன.
அதிமுக தேர்தல் பணிமனை:
இதனைத்தொடர்ந்து, ஈரோடு அதிமுக தேர்தல் பணிமனையில் கூட பாஜக தலைவர்கள் படம், கொடி உள்ளிட்ட எதுவும் இடம்பெறாதது, மேலும் கேள்வியை எழுப்பியிருந்தது. இதன்பின், இடைத்தேர்தலில் அதிமுக இபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு பாஜக ஆதரவு என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மறுபக்கம், தேர்தல் பணிமனையில் மோடி, அண்ணாமலை படங்கள் இடம்பெற்றன. இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இதனால், பல்வேறு குழப்பங்கள் நீடித்தது.
பாஜவுடனான கூட்டணி தொடரும் தொடரும் – இபிஎஸ்
சமீபத்தில் நெல்லையில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக யாரையும் நம்பி இல்லை, அதிமுகவை நம்பித்தான் பலர் இருக்கின்றனர் என்றும் பாஜவுடனான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர் எனவும் தெரிவித்திருந்தார். இணைத்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவை அதிமுக தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.