தேமுதிக கொடி பறக்குமா?தேமுதிகவின் முடிவுக்காக காத்திருக்கும் அதிமுக கூட்டணி கட்சிகள் !!ஆலோசனையில் விஜயகாந்த்
- மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
- விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது .
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.ஆனால் அந்த ஆலோசனையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.அதேபோல் இதற்காக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விஜயகாந்தை சந்தித்தார்.ஆனால் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.06) சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த விழாவின் மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் (தேமுதிகவையும்) சேர்த்து பேனர்கள் வைக்கப்பட்டது.ஆனால் இன்று காலை சென்னையில் வைக்கப்பட்ட பேனர்களில் தேமுதிகவின் படம் இல்லை. இந்நிலையில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.