AIADMK: சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி தான் அதிமுக – எடப்பாடி பழனிசாமி பேட்டி
மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சனாதன தர்மத்தை பற்றி திமுக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்களை திசை திருப்பவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகிறார்.
ஊழல், சட்டம் ஒழுங்கு, விலைவாசி உஅயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே சனாதனத்தை கையில் எடுத்துள்ளது திமுக. பட்டியலின மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள். எனவே, மக்களை திசை திருப்புவதற்கான நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார்.
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக என்று சனாதனம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பட்டியலின சமூகத்தினருக்கு எதிராக செயல்பட்டவர்கள் திமுகவினர். ஒரே நாடு ஒரே தேர்தலை 2018ல் அதிமுக எதிர்த்ததே என்ற கேள்விக்கு சூழலுக்கு ஏற்ப முடிவு எனவும் இபிஎஸ் பதிலளித்தார்.
எமர்ஜென்சியை எதிர்த்த திமுக இன்று காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது போன்றுதான் இதுவும் என்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்றவுடன் தேர்தலை சந்திக்க முதலமைச்சர் ஏன்? பயப்படுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாரிசு அரசியல் செய்யும் காலம் விரைவில் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.