விவசாய கூலியை ரூ.800 ஆக உயர்த்த வேண்டும் – முதலமைச்சர் சந்தித்த பிறகு திருமாவளவன் பேட்டி
சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், நாளை எனது பிறந்தநாள் என்பதால் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றேன். தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இதில், விவசாய கூலியை ரூ.800 ஆக உயர்த்தி தர வேண்டும்.
கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்படும் கூலியை போன்று தமிழகத்திலும் வழங்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகையை அனைத்து பெண்களும் பெறக்கூடிய வகையில் வரையறைகளை தளர்த்த வேண்டும். பள்ளிகளை மேம்படுத்துவதோடு ஆசியர்கள் பற்றாக்குறையை மற்றும் நியமனங்களை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். அனைத்து மருத்துவமனைகளிலும் கண் சிகிச்சை பிரிவுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாங்குநேரி மாணவரின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று வீடு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதியின் பெயரால் நெல்லை, தூத்துக்குடி வட்டாரத்தில் இந்த கொடுமை தொடர்ந்து நடந்து வருவதால், சாதி பிரச்சனைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும். நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். மனநல ஆலோசனை வழங்கும் மையங்களை கூடுதலாக உருவாக்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன் என கூறினார்.