அனைவரும் பாராட்டும் வகையில் வேளாண் பட்ஜெட் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
இயற்கை வேளாண்மைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பதில்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அனைத்து கட்சிகளும் பாராட்டும் நிதி நிலை அறிக்கையாக வேளாண் நிதி நிலை அறிக்கை உள்ளது.
பல்வேறு தரப்பினர் பாராட்டு:
வேளாண் பட்ஜெட்டுக்கு வெளிநாட்டில் உள்ள தமிழர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் வாழ்வில் வசந்தம் வீசும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். மா பயிரை பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நிதி உதவி:
பருவம் தவறிய மழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு 20,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. 55,000 ஹெக்டேர் அதிகமாக கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற உடன் கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. வேளாண் நிதி நிலை அறிக்கை மூலம் சுமார் 70 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றுள்ளார்.
இவ்வாண்டு 119 அறிவிப்புகள்:
மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 119 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் கொடுப்பதற்கு மாப்பிள்ளை சம்பா தயாராக உள்ளது என்றும் பலாக்கன்று, மாங்கன்று 10 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பதில் அளித்தார்.