வேளாண் பட்ஜெட், கறி செய்து சாப்பிட முடியாத காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது – டிடிவி

Default Image

தமிழக வேளாண்மை பட்ஜெட், கறி செய்து சாப்பிட முடியாத காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாக தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போடப்பட்ட இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றிற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக வேளாண் அமைச்சர் பெருமிதம் பொங்கக் கூறியிருக்கிறார்.

ஆனால், அவற்றில் எத்தனை அறிவிப்புகளால் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால், ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது. நெல்லுக்கு ஆதார விலையைக் கூட்டியிருப்பதாகக் கூறும் தி.மு.க. அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை சரியான நேரத்தில் திறக்காமலும், திறந்த பிறகு சரியான முறையில் நெல் கொள்முதல் செய்யாமலும் எத்தனை லட்சம் நெல் மூட்டைகள் வீணாகின? விவசாயிகள் எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தனர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைப்போல கரும்பு கொள்முதல் விலையை சிறிதளவு உயர்த்திவிட்டு மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் ஆண்டுக்கணக்கில் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத்தொகையைப் பெற்றுத்தர என்ன நடவடிக்கையை இதுவரை எடுத்திருக்கிறார்கள்?. இயற்கை விவசாயிகளை அடையாளங்கண்டு தனிப் பட்டியல் தயாரிப்பதற்கு கடந்த வேளாண் பட்ஜெட்டில் ரூ.33 கோடி ஒதுக்கியிருந்தார்கள். ஆனால், அது என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இயற்கை விவசாயத்திற்கு இப்போது ரூ.400 கோடி புதிதாக ஒதுக்கியிருக்கிறார்கள்.

இந்த நிதியாவது விவசாயிகளுக்கு முறையாகச் சென்றடையும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். வீடுதோறும் தென்னங்கன்று வழங்குவதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மேம்பாட்டிற்கான திட்டமாகத் தெரியவில்லை. தி.மு.க.வினரின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு போலத் தெரிகிறது. இந்த நிதியைப் பயன்படுத்தி கஜா புயலுக்குப் பிறகு பெருமளவு தொய்வடைந்திருக்கிற தென்னை விவசாயிகளுக்கு உதவலாம்.

வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.1 வட்சம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கு ரூ.1 லட்சம் போதுமானதல்ல என்ற எதார்த்தத்தை அரசு உணர வேண்டும். மொத்தத்தில் தமிழக வேளாண்மை பட்ஜெட் கறி செய்து சாப்பிட முடியாத காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்