சென்னை புதிய விமான நிலையம்.! 13 கிராமங்களின் 80 நாள் போராட்டம் வாபஸ்.!
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்ட பிறகு 13 கிராம மக்களின் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டது.
சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையத்தை அடுத்து, இரண்டாவதாக சென்னை அருகே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் கிராமத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இதற்கான திட்ட வரைவுகளும் தயார் ஆனது.
ஆனால் இதனை எதிர்த்து, பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் ஒன்றைந்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதாவது விமான நிலைய வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள 4700 ஏக்கர் நிலத்தில் 3000 முதல் 3500 ஏக்கர் நிலமானது நஞ்சை , புஞ்சை எனும் விவசாய நிலமாகும். மீதமுள்ள ஏக்கர் நிலம் மட்டுமே தரிசு நிலம் எனவும்,
பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் அங்குள்ள 1500 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களின் நிலம், வீடு பறிபோகும் சூழல் இருகிறது என விவசாய கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
80 நாட்களை கடந்த இந்த போராட்டத்தை அடுத்து, அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி, அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், மீண்டும் விமான நிலைய வரைவு விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்டு அதனை அரசுக்கு சமர்ப்பிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்த நிலையில், விவசாய கூட்டமைப்பினர் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.