புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பி விட்டு தவெக தலைவர் விஜய் தனியே ஆலோசனை.?
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை நியமிக்கவுள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரை வெளியே இருக்க சொல்லிவிட்டு, மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் விஜய் தனியாக ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு அரசியல் பணிகள் தீவிரமாக நடத்தி வருகிறார். கடந்தாண்டு பிப்ரவரியில் கட்சி தொடங்கப்பட்ட நிலையில், அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
அதற்குள் கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பை வழங்க கட்சி தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு முறைப்படி நடைபெற்று தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் விஜயிடம் கொடுக்கப்பட்டது.
அதில் உள்ளவர்களை பகுதி பகுதியாக சந்தித்து விஜய் நேர்காணல் செய்ய திட்டமிட்டிருந்தார். முதற்கட்டமாக, அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோயமுத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுகல், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக நேர்காணல் செய்கிறார் விஜய்.
தற்பொழுது, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை, தனது அறையில் இருந்து வெளியே அனுப்பிவிட்டு, கட்சிப் பொறுப்பாளர்களை ஒவ்வொருவராக அழைத்து, கட்சியின் கட்டமைப்பு, மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு, மாவட்ட அளவில் இருக்கும் பிரச்னை, புதிய நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகளை நியமிக்க பணம் வசூல் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.