மெட்ரோ திட்டம்., ரூ.2,152 கோடி நிதி., 145 மீனவர்கள் விடுதலை., டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி.!
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம், தமிழக மீனவர்கள், பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றன.
இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார். அந்த நிகழ்வில் கூறுகையில், ” பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லி வந்தேன். இன்று காலை பிரதமரை சந்தித்தோம். இந்த சந்திப்பு பயனுள்ளதாக மாற்றுவது பிரதமர் மோடி கையில் தான் உள்ளது.
இந்த சந்திப்பில் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதில் ஒன்று, சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குவது குறித்தது. 2019ஆம் ஆண்டு தமிழக அரசு கடன் பெற்று 2ஆம் கட்ட மெட்ரோ பணிகளை ஆரம்பித்தது. பின்னர் மத்திய அரசு நிதி தருவதாக ஒப்புக்கொண்டது. இத திட்டத்திற்கு இதுவரை மாநில அரசு சார்பில் ரூ.18,564 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். அதனை தாமதமின்றி ஒதுக்க வேண்டும் என்பதாகும்.
அடுத்த கோரிக்கை, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு தரவேண்டிய நிதியை தராமல் இருப்பது. பள்ளிக்கல்வித்துறை உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு 40 சதவீத நிதியும் ஒதுக்க வேண்டும். ஆனால் , மத்திய அரசு கல்விக்கொள்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை எனக் கூறி, இதுவரை இந்த கல்வியாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2,152 கோடியில் ஒரு தவணை கூட மத்திய அரசு தரவில்லை.
தேசிய கல்விக்கொள்ளையின் முக்கிய சாராம்சங்களை ஏற்கனவே தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் , தேசிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கை என்பதை தமிழக அரசு ஏற்கவில்லை . அதனால், தமிழக அரசுக்கு இன்னும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
அடுத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன். தற்போது இலங்கை கடற்படையிடம் 191 மீன்பிடி படகுகள் 145 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க வேண்டும் என 3 பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
சாதாரணமாக 15 நிமிடங்கள் மட்டுமே பிரதமருடனான சந்திப்பு நிகழும். ஆனால் நாங்கள் 45 நிமிடங்கள் சந்திப்பு நிகழ்த்தினோம். நான் கூறிய கோரிக்கைகளை அந்தந்த துறை அமைச்சர்களிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக பிரதமர் கோரியுள்ளார்.” என டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.