இபிஎஸ்-ஐ தொடர்ந்து அண்ணாமலையின் ‘திடீர்’ டெல்லி விசிட்! ‘தலை’மை தப்புமா?
எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணத்தை அடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மற்ற எம்எல்ஏக்கள் என பலரும் தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர். அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இப்படியான சூழலில் நேற்று முன்தினம் திடீரென எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் மேற்கொண்டார்.
முதலில் அதிமுக அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டுள்ளது. அதனை காணவே நாங்கள் வந்துள்ளோம் என கூறினார். அதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகிய மூத்த அதிமுக நிர்வாகிகளோடு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்கள்.
2026-ல் NDA ஆட்சி
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்பதை எடப்பாடி பழனிச்சாமி மறுத்து, மக்கள் பிரச்சனை குறித்து பேசவே (சட்டமன்ற கூட்டத்தொடரை தவிர்த்து) நாங்கள் அமித்ஷாவை சந்தித்து பேசினோம் என கூறினாலும், அமித்ஷா இந்த சந்திப்புக்கு பிறகு , 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என கூறி கூட்டணி குறித்த பேச்சுக்கு தீனி போட்டுவிட்டார்.
தலைமையை மற்ற வேண்டும்
2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை விமர்சித்தது தான். அதன் பிறகே அதிமுக – பாஜக இடையே வார்த்தை மோதல் உருவாகி கூட்டணி முறிவுக்கு வழிவகுத்தது. இதனால், கூட்டணிக்கு அதிமுக தலைவர்கள் வைத்த முக்கிய கண்டிஷன் பாஜக மாநில தலைமையை மற்ற வேண்டும் என்பது தான் எனக் கூறுகிறது அரசியல் வட்டாரம். இதற்கு பாஜக தேசிய தலைமை சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை டெல்லி விசிட்
இப்படியான சூழலில் தான் இன்று காலை திடீர் பயணமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுள்ளார். அங்கு தேசிய தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். இன்றைய பேச்சுவார்த்தையில் அண்ணாமலை பதவி தப்புமா? அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராஜினாமா செய்வேன்
இதற்கிடையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் நான் ராஜினாமா செய்துவிடுவேன் என அண்ணாமலை கூறிய பழைய வீடியோக்கள், பாஜகவால் தான் அதிமுக தோற்றது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூறிய வீடியோக்களை சிலர் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.