எய்ம்ஸ்-ஐ தொடர்ந்து தமிழக மருத்துவமனை தரவுகளில் கைவரிசை காட்டிய ஹேக்கர்ஸ்.!
1.5 லட்சம் தமிழ்நாடு மருத்துவமனை நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி டார்க் வெப்பில் விற்பனை.
நாட்டின் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதான கம்ப்யூட்டர் (சர்வர்) கடந்த 23-ம் தேதி திடீரென முடங்கியது. ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் மூலம் ஹேக்கர்கள் நடத்திய கைவரிசையால் சர்வர் செயலிழந்து விட்டது. இந்த முடக்கத்தை விடுவிப்பதற்கு ரூ.200 கோடி கிரிப்டோகரன்சியில் தர வேண்டும் என ஹேக்கர்கள் மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த முடக்கத்தால் மருத்துவமனையில் ஏராளமான பணிகள் முடங்கி உள்ளன. ஹேக்கர்களால் முடங்கிய சர்வரை சரி செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அது முடியவில்லை. இதனால் 10வது நாளாக நேற்றும் மருத்துவமனையில் பணிகள் பெரும் நெருக்கடியை சந்தித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை கம்ப்யூட்டர்களின் இணையதள இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
ஹேக்கர்களின் இந்த தாக்குதல் குறித்து இந்திய கம்ப்யூட்டர் எமர் ஜென்சி மீட்புக்குழு, தேசிய புலனாய்வுப்பிரிவு மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் மீதான ரான்சம்வேர் தாக்குதலுக்கு பின்னணியில் சதி இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை தொடர்ந்து தமிழக மருத்துவமனை தரவுகளில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அதாவது, 1.5 லட்சம் TN மருத்துவமனை நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் டார்க் வெப்பில் விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CloudSEK-இன் அறிக்கையின்படி, தமிழகத்தை தளமாகக் கொண்ட ஸ்ரீ சரண் மருத்துவ மையத்தின் குறைந்தது 1.5 லட்சம் நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி டார்க் வெப்பில் விற்பனை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழக மருத்துவமனையில் ஹேக்கர்களால் திருடப்பட்ட தரவுத்தளம் $400 வரை டார்க் வெப்பில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் ஹேக்கர்கள் திருடிய தரவுகளில் பெயர்கள் மற்றும் முகவரிகள் போன்ற விவரங்கள் இருப்பதாகவும், 2007 மற்றும் 2011 க்கு இடைப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.