கனியாமூர் தனியார் பள்ளியில் 68 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்!
போலீஸ் பாதுகாப்புடன் கனியாமூர் தனியார் பள்ளியில் 68 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, நீதி கேட்டு தொடர்ந்து மாணவியின் தாயார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன்பிறகு ஜூலை 17-ஆம் தேதி பள்ளி முன் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது.
இந்த வன்முறையில் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து எரிப்பு, சான்றிதழ்கள் எரிப்பு உள்ளிட்ட பள்ளி முழுவதும் வன்முறையால் சூறையாடப்பட்டது. இதனால் பள்ளி மூடப்பட்டு, அப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மற்றும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மறுபக்கம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கலவரத்துக்கான காரணம், கலவரத்தில் ஈடுபட்டவர்களை அந்த குழு கைது செய்தது.
இதனிடையே, மாணவர்களின் எதிர்காலம் கருதி மீண்டும் பள்ளியை திறந்து சீரமைக்க அனுமதிகோரி பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி, கனியாமூர் கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி 68 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று திறக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஆட்சியர் 45 நாட்கள் அனுமதி தந்ததை தொடர்ந்து, தனியார் பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.