38 ஆண்டுகளுக்குப் பிறகு…”சரித்திரத்தில் தனக்கான இடம்” – தொண்டர்களுக்கு முதல்வர் மடல்!

Default Image

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை,துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நாளை திறந்து வைக்கிறார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து  வைக்கிறார்.இந்த நிகழ்வு நாளை (28-ஆம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை உரையாற்றவுள்ளார்.மேலும்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,வரவேற்புரையாற்ற உள்ளார்.இந்நிலையில்,திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடி:

“அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வரவேற்பு மடல்.இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி,சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் நாளை அவரது திருவுருவச் சிலை திறக்கப்படவுள்ளது.

‘உடன்பிறப்பே..’ என்ற காந்தக்குரல்:

இந்நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்.திசையெல்லாம் மகிழ்ச்சி பரவிடும் நாள்! ‘உடன்பிறப்பே..’ என்று தமது காந்தக் குரலால் அவர் நம்மை பாசத்துடன் அழைப்பது போன்ற உணர்வைப் பெறுகின்ற திருநாள்.தனது கை உயர்த்தி,ஐந்து விரல்களைக் காட்டி மக்களின் செல்வாக்கைப் பெற்ற நம் உயிர்நிகர்த் தலைவரை, தமிழ்நாட்டு மக்கள் ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தனர். தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையும் நம் ஆருயிர்த் தலைவருக்கேயுரியது.

கடப்பாரை கொண்டு தகர்க்கப்பட்ட சிலை:

இவ்வாறு,அரசியல்,பொதுவாழ்வில் நேரான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது போல,தலையில் நேர்வகிடு எடுத்த இளமையின் விளிம்பிலான தலைவர் கலைஞர் அவர்களின் அழகிய தோற்றத்துடன் அமைந்த சிலை அது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலக்குறைவால் 1987-ஆம் ஆண்டு மறைவெய்தியபோது, அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில தீயசக்திகளால்,அன்றைய அரசின் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் முத்தமிழறிஞர் சிலையினைக் கடப்பாரை கொண்டு தாக்கி, தகர்த்தெறிந்த அக்கிரமத்தை அண்ணாசாலை மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
கழகத்தினர் துடித்தனர்.

முதுகில் குத்தவில்லை,நெஞ்சில்தானே குத்துகிறான்:

தலைவர் கலைஞரால் கொள்கை உரமேறிய இளைஞர்கள் – மாணவர்கள் பதறினர். “எம்.ஜி.ஆர். உடல்நலமில்லாமல் இறந்ததற்குக் கலைஞர் சிலையை ஏன் உடைக்க வேண்டும்?” என்று பொதுமக்களும் கேட்டனர். எவனோ ஒருவன் தலைவரின் சிலையைத் தகர்க்கும் புகைப்படம் நடுநிலை ஏடுகளில் வெளியாகி,தமிழ்நாட்டையே கலங்க வைத்தது.
தலைவர் கலைஞர் அவர்களோ தன் சிலை தகர்க்கப்பட்ட நிலையிலும், சற்றும் மனம் தளராமல், தன் நெஞ்சத்தில் ஊறும் வற்றாத தமிழ் உணர்விலிருந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து, “செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும்.அந்த சின்னத் தம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சில்தானே குத்துகிறான். அதுவரையில் நிம்மதி எனக்கு” என்று காலம் கிழித்துப்போட முடியாத கவிதையினை வடித்து வழங்கினார்.

38 ஆண்டுகளுக்குப் பிறகு:

இந்த நிலையில்,அந்த அண்ணா சாலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை நிறுவப்படுகிறது. அவர் சிலையாக மட்டுமல்ல, நம் நெஞ்சில் நிலையாக வீற்றிருந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டே இருக்கிறார்.எனவே, முதலமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்