17 ஆண்டுகளுக்கு பின் ஆதிச்சநல்லூரில் இன்று மீண்டும் அகழாய்வுப்பணி தொடக்கம்…!
17 ஆண்டுகளுக்குப் பின்பு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழ்வுப் பணி தொடங்கியுள்ளது.
முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் 1876-ல் ஆண்டு அகழாய்வு நடைபெற்றது. பின், 1903-2004ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் 2004-2005 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி குழுவினர் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு பணியில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழ்வுப் பணி தொடங்கியுள்ளது. இந்த அகழ்வுப் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர் .
மேலும், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை இந்த பகுதியிலே காட்சிப்படுத்த உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், தாமிரபரணி நதிக்கரையில் 36 இடங்களில் அகழாய்வு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.