11 நாட்களுக்குப் பின் மதுரை அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்கு இடையே மோதல் போக்கானது தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில், ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு வார்டில் அத்துமீறி நுழைந்த மாநகராட்சி நகர் நல அலுவலரை பணிநீக்கம் செய்ய கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க கோரியும் கடந்த 11 நாட்களாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின், அக்.2 முதல் நடைபெற்ற அரசு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைகள் அனைத்தும் வழக்கம் போல நடைபெறும் அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலித்து விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தை தொடர்ந்து இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.