ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.! அதிமுக டெபாசிட் இழக்கும்.! கோவை செல்வராஜ் உறுதி.!
ஊழலை பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது என பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோவை செல்வராஜ், இடை தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தனது விமர்சனத்தை முன் வைத்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களம் தற்போது தீவிரமாக இயங்கி வருகிறது. பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குறுதிகளையும், அதேபோல் மற்ற கட்சியினரை தாக்கியும் பேசி வருகின்றனர். இதனால் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது.
இபிஎஸ் விமர்சனம் : சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை சென்றிருந்தார். அங்கு முன்னதாக பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த மருத்துவ சரவணன், உடன் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. அந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசி இருந்தார்.
அதிமுகவுக்கு மட்டுமே தகுதி : அதிமுகவில் சாதாரண தொண்டனும் உச்சத்திற்கு வர முடியும். ஆனால், திமுகவில் குடும்ப அரசியல் தான் நடைபெற்று வருகிறது. கலெக்சன், கரெப்சன், கமிஷன் என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 85 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பொய் கூறி வருகிறார். தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளில் 90 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. ஊழலை பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதியே இல்லை என்று தங்கம் தென்னரசு பேசி இருக்கிறார். ஊழலை பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது எனவும் இபிஎஸ் பேசியுள்ளார்.
கோவை செல்வராஜ் பதிலடி : இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் திமுக பற்றி பேசியுள்ளார். அவர் திமுக பற்றி பேசுவதற்கு எந்த வித தகுதியும் கிடையாது என மிகவும் காட்டமான தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
20 ஆண்டுகால திட்டங்கள் : அதிமுக தற்போது பாஜகவிடம் கொத்தடிமையாக இருந்து வருகிறது. அதிமுகவை வழிநடத்துவது பாஜக தான். 20 மாத ஆட்சி காலத்தில் 20 ஆண்டுகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை திமுக செயல்படுத்தி உள்ளது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் நீட்டிப்பு , புதுமைப்பெண் திட்டம், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழகத்தில் வறுமை ஒழிக்கப்பட்டு உள்ளது. மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். என திமுக பற்றி பேசுமையாக பேசினார் கோவை செல்வராஜ்.
டெபாசிட் இழக்கும் : அவர் மேலும் கூறுகையில், அதிமுக தற்போது மண் குதிரையாக இருக்கிறது. என்று விமர்சித்தார் . மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தனது விமர்சனத்தை முன் வைத்தார் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து தற்போது திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்.