அதிமுக vs பாஜக.! தொடரும் வார்த்தை மோதல்… “நாங்க இல்லாம நீங்க இல்ல…”
சென்னை : அதிமுக மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் இடையேயான வார்த்தை மோதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. இரு கட்சித் தலைவர்களுமே “நாங்க இல்லாமல் அந்த கட்சி இல்லை” என கூறி வருகின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரையில் அதிமுக – பாஜக ஒரே கூட்டணியில் செயல்பட்டு வந்தன. அதன் பிறகு, பல்வேறு அரசியல் சூழ்நிலை காரணமாக பாஜக – அதிமுக கூட்டணி முறிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளும், அதிமுக தலைவர்கள் பற்றி அவர் முன்வைத்த கருத்துக்களும், அதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்க்கருத்து கூறி வந்ததும் பாஜக – அதிமுக கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்த வார்த்தை போர் இல்லாமல் இருந்துவந்த சூழலில், அண்மையில் நடைபெற்ற கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில் இருந்து மீண்டும் வார்த்தைப் போர் ஆரம்பமாகிவிட்டது. அந்த விழாவில் திமுக தலைவர்களும் பாஜக தலைவர்களும் ஒரே மேடையில் இருந்ததை அதிமுக விமர்சனம் செய்ய தொடங்கியது. அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் கருத்து கூற ஆரம்பித்து தற்போது “எங்கள் கட்சி இல்லாமல் உங்கள் கட்சி இல்லை ” என இரு கட்சியினரும் உரக்க சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது.
கலைஞர் நினைவு நாணயம் :
கடந்த ஞாயிற்று கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் கலைஞர் கருணாநிதி நினைவாக அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் துரைமுருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என பலர் கலந்து கொண்டனர்.
திமுக – பாஜக கள்ளக்கூட்டணி :
இந்நிகழ்வு குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பாஜக – திமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. ராஜ்நாத் சிங்கை அழைத்த திமுக ஏன் ராகுல்காந்தியை ஏன் அழைக்கவில்லை.? கலைஞர் 100 ரூபாய் நாணயத்தில் ஹிந்தி எழுத்து இருக்கிறது.” என விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி ஆ.ராசா ஆகியோர் விமர்சனம் செய்து இருந்தனர்.
அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி :
அதேபோல கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா குறித்து மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “திமுக இரட்டை வேடம் போடுகிறது. கலைஞரின் நாணயத்தை வெளியிட வேண்டும் என்று தான் ஆளுநரின் தேனீர் விருந்தில் திமுக கலந்து கொண்டுள்ளது.” மேலும், கலைஞர் நாணயம் வெளியீட்டு நிகழ்வுக்கு செல்வதற்கு முன்னர் அண்ணாமலை, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலைஞர் நினைவிடம் சென்றனர். அப்போது அண்ணாமலை கலைஞர் நினைவிடத்தை வணங்கியதை குறிப்பிட்டு “அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி இன்றி உள்ளார் ” என ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.
கும்பிடு போடுவது தவறில்லை :
அதற்கு திருப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ” கும்பிடு போடுவது தவறில்லை. அடுத்தவர்கள் காலில் விழுவது தான் தவறு. ஆர்பி.உதயகுமார், சசிகலா முன் கைகட்டி , வாய் மூடி பதுங்கி நிற்பார். கலைஞர் 80 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளார். தமிழகதிற்கு அவர் செய்த பணிக்காக அவர் நினைவிடத்தில் கும்பிட்டது தவறில்லை. வாஜ்பாய் காலத்தில் திமுக – பாஜக ஒரே கூட்டணியில் இருந்தது. சித்தாந்த ரீதியில் வேறு வேறாக இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் செய்த பணிக்காக ஒரு விவசாயியின் மகனாக கலைஞர் நினைவிடத்தில் கமரியாதை செலுத்தினேன்.” என கூறினார்.
திமுக – பாஜக ஒப்பந்தம் :
அடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “திமுக – பாஜக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கலைஞர் சிலை திறப்பு, திமுக எம்பிக்கள் பார்ட்டி, கலைஞர் நாணயம் வெளியீடு என அனைத்திற்கும் பாஜக தலைவர்கள் தான் வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு எதிராக பாஜக பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக தலைவர்களை மட்டுமே பாஜக விமர்சித்தது. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவானது விக்ரமன் படம் போல குடும்ப பாசம் நிறைந்த விழாவாக தான் இருந்தது. பாஜக – திமுக அண்ணன் தம்பியாக ஒட்டி உறவாடினார்கள்.
முளைத்து மூன்று இலை…
முளைத்து மூன்று இலை கூட விடவில்லை. அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். அதிமுக 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கட்சி. 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. அதிமுக போட்ட பிச்சையில் 4 பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் உள்ளனர். பாஜகவுக்கு சொந்தக்காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது. எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்துப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. 2026ல் தனியாக நின்று ஒரு சீட் ஜெயித்து பாருங்கள். ” என்று ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
பாஜக இல்லையென்றால்..?
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அதிமுகவில் பல எம்எல்ஏக்களை உருவாக்க பாஜக உழைத்திருக்கிறது. இல்லாவிட்டால், தற்போது உள்ள எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத நிலையில் அதிமுக இருந்திருக்கும். அதிமுக தங்கள் வாக்கு சதவீதத்தை பார்த்து பரிதாபப்பட வேண்டும். காலையில் எழுந்தது முதல் இரவு வரை “பாஜக” “பாஜக” என்று பேசுவதையே வேலையாக அவர்கள் வைத்திருக்கிறார்கள். அதிமுகவினருக்கு அரசியல் பெருந்தன்மை இல்லை, நாகரிகம் இல்லை. அதிமுகவினரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் தவறாக போய்விடும்” என காஞ்சிபுரத்தில் அண்ணாமலை விமர்சனம் செய்த்துள்ளார்.
வடிவேலு காமெடி :
இதற்கிடையில், மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ” வடிவேலுவின் சூனா பானா காமெடி போல பாஜக தலைவர் அண்ணாமலை நடந்து கொள்கிறார். அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமான அரசியல்வாதி” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாங்களும் தயார் :
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும். மத்தியில் அதிகாரம் இருந்தும் தமிழ்நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக தமிழக பாஜக என்ன செய்து இருக்கிறது.? தனிநபர் விமர்சனத்த்தை அண்ணாமலை பேச தயார் என்றால் நாங்களும் தயார். பாஜக தொண்டர்களை அண்ணாமலை தவறாக வழிநடத்த வேண்டாம்” ஆர்.பி.உதயகுமார் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இப்படியாக கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் ஆரம்பித்த வார்த்தை போர் விவகாரம், தற்போது வரையில் அதிமுக – பாஜக தலைவர்கள் இடையில் நீண்டு கொண்டு இருக்கிறது.