அழுத்தத்தில் கூடுகிறதா?? அதிமுக தலைமை..நாளை முக்கியமுடிவு!!
பரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழுக்கூட்டம் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றது. இந்நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இப்போதே தேர்தல் பணியை தொடங்கி உள்ளது.
இதில் முதல் கட்டமாக கட்சியின் செயற்குழுவை நாளை (திங்கட்கிழமை) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட உள்ளது. காலை 9.45 மணிக்கு செயற்குழு நடக்கிறது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என உள்ளடக்கிய செயற்குழுவில் சுமார் 250 பேர் பங்கேற்க உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
நாளை கூடும் செயற்குழுவையொட்டி அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனை அவரது வீட்டில் முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசிய நிலையில் அவைத்தலைவர் என்ற முறையில் செயற்குழு கூட்டத்தை மதுசூதனன் தலைமை தாங்கி, நடத்த உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடிய உயர்மட்ட கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்தும் முதலமைச்சர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பது ஆகியவைத் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. இதன் தொடர்ச்சி இந்த கூட்டத்திலும் நிர்வாகிகள் தங்களின் கருத்துகளை முன்வைக்க இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் கசிகிறது.
செயற்குழு கூட்டத்தை அடுத்து, பொதுக்குழு நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று இதில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் தான் ஒப்புதல் வழங்கப்பட்டு அதன் பின்னரே நடைமுறைக்கு கொண்டு வரப்படும் மேலும் செயற்குழுவில், கட்சியின் வளர்ச்சிப்பணிகள், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறதுது.