அதிமுக – பாஜக கூட்டணியா.? “ஒட்டுமில்லை, உறவுமில்லை.!” ஜெயக்குமார் திட்டவட்டம்.!
2026இல் பாஜகவுடன் கூட்டணி இல்லை, எங்களுடன் ஒத்த கருத்துடன் வருபவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு பதில் அளித்த இபிஎஸ், ” திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என ஒத்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். எங்கள் நிலைப்பாட்டுடன் ஒத்துபோய் யார் யார் கூட்டணிக்கு வருகிறார்களோ அவர்கள் அனைவரும் ஒத்த கருத்துடையவர்கள் தான். அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும்”என தெரிவித்து இருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என வெளிப்படையாக எந்த கருத்தும் இபிஎஸ் தெரிவிக்காத காரணத்தால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சுக்கள் எழுந்தன. இந்த பேச்சுக்கள் குறித்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னால அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “பாஜகவுடன் திமுக தான் மறைமுக கூட்டணி வைத்துள்ளது. ஒரு பிரதமரை எந்த மாநில அமைச்சரும் நேரடியாக அவ்வளவு எளிதாக சந்திக்க முடியாது. ஆனால் இங்கு அமைச்சராக இருந்த உதயநிதி நேரடியாக பிரதமரை சந்தித்து விட்டு வருகிறார் என்றால் அவர்கள் தான் மறைமுக கூட்டணி வைத்து ஒரு அண்டர்ஸ்டாண்டிங் உடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
நாங்கள் எந்தவித மறைமுக கூட்டணியும் வைத்துக்கொள்ளவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற கட்சி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2026இல் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளில் எங்களுடன் ஒத்த கருத்து உள்ள அரசியல் கட்சிகளோடு நாங்கள் கூட்டணி அமைப்போம். பாஜகவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை. ” என்று அதிமுக முன்னால அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.