சட்டப்பேரவையில் சஸ்பெண்ட்.. உண்ணாவிரத களத்தில் இறங்கிய இபிஎஸ்.!

ADMK MLAs Protest in Chennai Egmore Rajarathnam Stadium For Kallakurichi Issue

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது. 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக கட்சிகளோடு விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து வலியறுத்தி வந்தனர். இருந்தும் கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் நடத்த சபாநாயகர் கூறி வந்தாலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர்.

இதனால், கடந்த செவ்வாய் அன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள், நேற்றும் அமளியில் ஈடுபட்டதால், இந்த கூட்டத்தொடர் முடியும் வரையில் (ஜூன் 29) அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாபநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடத்த அனுமதிக்காததை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து, காவல்துறை முன் அனுமதியுடன் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை தற்போது துவங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு துவங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று மாலை 5 மணி வரையில் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தவிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட ரீதியில் கட்சி நிர்வாகிகள் என மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்த்துறை வாகனங்கள் மட்டுமல்லாது மாநகராட்சி பேருந்துகளும் தயார் நிலையில் உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்