இபிஎஸ் மீது போலீஸ் வழக்குபதிவு.! சென்னை, மதுரையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை அன்று சிவகங்கையில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். மதுரை விமானநிலைய பேருந்தில் எடப்பாடி பழனிசாமி பயணித்த போது அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேசி முகநூல் பக்கத்தில் நேரலை வீடியோ பதிவிட்டார்.
இரு தரப்பு புகார் :
அந்த வீடியோ எடுத்து கொண்டு இருக்கும்போதே, பாதுகாவலர் போனை வாங்கி நேரலையை தடுத்துவிட்டார். அதன் பிறகு வெளியே வந்த ராஜேஸ்வரனை அதிமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் இரு தரப்பும் புகார் அளித்தனர்.
6 பிரிவுகளில் வழக்கு :
இந்த புகாரை அடுத்து, மதுரை காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாதுகாவலர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுகவின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டம் :
இத வழக்குப்பதிவு சம்பவத்தை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் , சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னாள் அமைச்சர்கள் :
மேலும், மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , ராஜன் செல்லப்பா ஆகியோர் அதிமுக தொண்டர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்போது திமுகவுக்கு எதிராகவும், வழக்குபதிவு செய்த காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.