செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!
செங்கோட்டையன் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த இபிஎஸ், இந்த கேள்விகளை அவரிடம் தான் கேட்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்சனைகளை இங்கு பேசாதீர்கள் என கூறினார்.

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 – 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண் பட்ஜெட் 2025 2026 தாக்கல் செய்யப்பட்டது. இன்று வேளாண் பட்ஜெட் விவாதங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள்.
ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார் என்ற சலசலப்பு நிலவி வரும் சூழலில், இன்று வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் வழக்கம் போல நடைபெற்றது.
ஆனால், செங்கோட்டையன் அதனை தவிர்த்து நேராக சபாநாயகர் அறைக்கு சென்று அவரை சந்தித்து விட்டு வந்தார். இது வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரின் நடுவிலும் மிக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து பல்வேறு யுகங்கள் எழுந்தன. இதுகுறித்து வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நீங்கள் அவரிடம் கேளுங்கள் சார்..,
ஆனால் செங்கோட்டையன் குறித்து கருத்து தெரிவிக்க எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், ” ஏன் தவிர்க்கிறார் எனபதை அவரிடம் (செங்கோட்டையன்) கேளுங்கள். அவரிடம் கேட்டால் தான் பதில் தெரியும். நீங்கள் அவரிடம் கேளுங்கள் சார். இது இங்கு கேட்கும் கேள்வியில்லை. தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்சனைகளை இங்கு பேசாதீர்கள்.
இங்கையும் தான் நிறைய உறுப்பினர்கள் வரவில்லை. அதற்காக ஏன் வரவில்லை என கேட்கலாமா? ஆனால், அதனை நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். இங்க இப்போது 62 உறுப்பினர்கள் வந்து இருக்கிறோம். அவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும் அதனால் வராமல் இருந்திருக்கலாம். அதிமுக என்றும் சுதந்திரமாக செயல்படும் கட்சி. திமுக போல அடிமை ஆட்கள் இங்கு கிடையாது.
நான் யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது
நான் ஒரு திருமணத்திற்கு போனால் கூட இவர் கலந்து கொள்ளவில்லை அவர் கலந்துகொள்ளவில்லை என செய்தி போடுகிறீர்கள். நான் யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது. நான் சாதாரண தொண்டன். நான் தலைவர் கிடையாது. திமுக மாதிரி வாரிசு அரசியல் இங்கு கிடையாது. குடும்ப கட்சி கிடையாது. சர்வாதிகார ஆட்சி கிடையாது. சுதந்திரமாக அனைவரும் செயல்படலாம். யாரும் எங்கும் போகலாம் யாரும் கேட்க மாட்டார்கள்.
நான் என்றைக்கும் யாரையும் எதிர்பார்ப்பவன் அல்ல, திமுகவை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை. எங்கள் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். எந்த கட்சியிலும் இந்த சுதந்திரம் கிடையாது. அதிமுகவில் மட்டுமே இந்த சுதந்திரம் இருக்கிறது. ” என எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த சட்டப்பேரவை விவகாரம், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு குறித்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் கூற தவிர்த்து விட்டார்.