அதிமுக தான் தலைமை.! சாதிவாரி கணக்கெடுப்பு தவறான நடைமுறை.! கிருஷ்ணசாமி பரபரப்பு.!

Puthiya Tamilakam katchi Leader K Kirshnasamy

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய விவாதங்கள் தற்போது இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  சாதிவாரி கணக்கெடுப்ப்பை நடத்துவோம் என ராகுல்காந்தி மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார். அடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டு அதனை நேற்று வெளிட்டுவிட்டார். இதனை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவும் , எதிர்ப்பும் அதிகமாகி கொண்டே வருகிறது.

இந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. நம் நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் முடிந்து 77வது ஆண்டில் இருக்கிறோம். இந்த சமயம் சாதிவாரியாக பார்த்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது, நாட்டை பின்னோக்கி இழுத்து செல்லும் செயல் ஆகும்.

இன்னும் மக்களை மதம், சாதி, மொழி, இனம் ரீதியில் பிரிப்பது எந்த வகையில் ஏற்புடையது என்று தெரியவில்லை. மக்களுக்கு சமத்துவமும், சமஉரிமையையும் கொடுப்பது உள்ளாட்சி , மாநில அரசு, மத்திய அரசின் கடமையாகும். பொதுமக்களின் தேவைகளை செய்ய தவறிவிட்டு, இப்போது சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தி என்ன செய்ய போகிறீர்கள் என தெரியவில்லை. இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என தெரியவில்லை. சாதிரீதியிலான கணக்கெடுப்பு என்பது தவறான நடைமுறை ஆகும் என தனது கருத்தை கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

முன்னதாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டார். அதில் பிற்படுத்தப்பட்டோர் 27.12 % பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01 சதவீதத்தினரும்,  SC பிரிவை சேர்ந்தவர் 19.65 சதவீதத்தினரும், பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர் 1.68 சதவீதத்தினரும் , பொதுப்பிரிவில் 15.52 சதவீதத்தினரும் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்து பீகாரை போல தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக,  தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பற்றியும், அதிமுக –  பாஜக கூட்டணி முறிவு பற்றியும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில்  2019 நாடளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் என இரு தேர்தல்களிலும் அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்பட்டது. தேசிய அளவில் பாஜக தலைமை என்றாலும், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் தலைமை.

தற்போது அதிமுகவே கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால் , தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது இல்லை. தமிழகத்தில் NDA கூட்டணியில் நிலையற்ற தன்மையாக உள்ளது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்