அதிமுக -திமுக இடையேதான் போட்டி, தேசிய கட்சிகள் பொருட்டே இல்லை -கே.பி.முனுசாமி பேச்சு
தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.
கடந்த 2019-ஆம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இருந்து தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் பாஜக கூட்டணியில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சற்று கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.குறிப்பாக அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில் ,பாஜக தலைமை தான் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பாஜகவினரின் இந்த கருத்துக்கு அதிமுகவினர் முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி தான் என்று பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனிடையே இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தனது கூட்டணி கட்சியான பாஜகவையும்,காங்கிரஸ் கட்சியையும் மறைமுகமாக தாக்கி பேசினார்.அவர் பேசுகையில், தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல.அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறிதான் தேசிய கட்சிகள் பயணம் செய்ய முடியும்.அவர்களால் களத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.தேர்தலில் அதிமுக -திமுக இடையேதான் நேரடி போட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.