முற்றும் அதிமுக – பாஜக வார்த்தைப் போர்.! அண்ணாமலைக்கு தமிழிசை அட்வைஸ்.!
சென்னை : தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என தமிழிசை சவுந்தராஜன் கருத்து கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு மேடைகளை பகிர்ந்து கொண்ட அதிமுக – பாஜக தலைவர்கள், தற்போது, கடுமையான வார்த்தை மோதல்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த மோதல்கள் மேடைகளில் கடுமையான சொற்களை வீசும் அளவுக்கு தற்போது விமர்சனங்கள் முற்றியுள்ளது.
இ.பி.எஸ் விமர்சனம் :
அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஓர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “நாங்கள் எல்லாம் கட்சியில் உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். உழைக்காமல் உயர் பதவிக்கு வந்தவர் என்றால் அது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான். அவர் என்ன உழைப்பை கொடுத்தார்?
பாஜகவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநில தலைவராக எதோ வாய்ப்பு கிடைத்துவிட்டது. அதனால் தலை கால் புரியாமல் ஆடுகிறார்.” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
“கிணற்றுத் தவளை”
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்சி நிகழ்வில் பேசிய அண்ணாமலை, “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா தலைமை வகித்த கட்சிக்கு பொதுச்செயலாளரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? கூவத்தூரில் என்ன அநியாயம் செய்தீர்கள்? டெண்டர் விட்டு தேர்வு செய்தார்கள். தவழ்ந்து காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கினார் எடப்பாடி பழனிச்சாமிக்கு, தன்மானமிக்க, விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்திட்டு ஒரு பைசா கூட கையூட்டு வாங்காத என்னைப்பற்றி பேசுவதற்கு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.
புரட்சி தலைவர், புரட்சி தலைவி தலைமைவகித்த அதிமுகவை ‘கிணற்று தவளை’ போன்றோர்கள் வழிநடத்தி வருகிறார்கள். 2026இல் தமிழகத்தில் இருந்து தூக்கியெறியப்பட வேண்டும்.” என எடப்பாடி பழனிச்சாமி பற்றி அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழிசை கருத்து :
அண்ணாமலையின் இப்படியான ஆவேசமான கருத்துக்கள் பற்றி முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழசை கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இன்னொரு தலைவர் பேசியதை பற்றி நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் பதில் சொல்வதற்கு ஒரு பாணி இருக்கும். அதுபோல பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவது ஒரு பாணி.
என்னை பொறுத்தவரையில், தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த மரியாதையை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை. இதனை வைத்துக்கொண்டு எனக்கும் அண்ணாமலைக்கும் இடையே சர்ச்சை எழுப்ப வேண்டாம். திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் (தமிழக பாஜக) ஒரே குறிக்கோள். “என தமிழிசை பேசினார்